×

வைகாசி மாதத்தின் தெய்வீக சக்திகளும் ராசி பலன்களும்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

மேஷ ராசியில் தனது உச்சகதியில் வலம் வரும் கிரகங்களின் நாயகரான சூரியன், அவரது பகை வீடான ரிஷபத்துக்கு மாறி, அதில் சஞ்சரிக்கும் மாதமே வைகாசி மாதம் எனக் கொண்டாடப்படுகிறது! வைகாசி மாதத்திற்கென்று ஓர் விசேஷ தனிச் சிறப்புள்ளது. திருக்கயிலையில் எம்பெருமானும், அம்பிகைபார்வதியும் மனம் மகிழும் தெய்வக் குழந்தைமுருகப்பெருமான் அவதரித்த புண்ணிய மாதம் இந்த வைகாசி என்பதே இம்மாதத்தின் தனிச்சிறப்பிற்குக் காரணமாகும்!

கைலாய பர்வதத்தின் அருகில் தன்னிகரற்றுப் பேரழகுடன் திகழும் மானஸ ஸரோவரத்தின் கரையில் உள்ளது, மாந்தாதா சிகரம். ராமபிரானின் மூதாதையர்களில் ஒருவரான மாந்தாதா மன்னர் பல ஆண்டுகள் அங்கு தவமியற்றியதால், அவரது பெயராலே அந்தச் சிகரம் அழைக்கப்பெற்றது. அந்த மாந்தாதா தொடரிலுள்ளது அழகான சரவணப் பொய்கை எனப் பூஜிக்கப்படும் தடாகம்!!

ஒரு சமயம், சிவபெருமானின் கண்களிலிருந்து தெறித்து சரவணப் பொய்கையில் விழுந்த ஆறு தீப்பொறிகள், அடுத்த விநாடியே அழகிற்கு அழகு சேர்க்கும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகளை, ஆறு கார்த்திகைப் பெண்கள் அணைத்தெடுத்துப் பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி மகிழ்ந்தனர். அந்த ஆறு குழந்தைகளையும், பரம கருணையுடன் அன்னை பார்வதி தேவி, ஒரு தாய், தன் குழந்தையை அணைப்பதுபோல் ஒருசேர அணைத்து, மகிழ்ந்தபோது, ஆறுமுகத்துடன் கூடிய ஒரே குழந்தையாக மாறின.

முருகன் அவ்வாறு அவதரித்த மகத்தான புண்ணிய தினம் வைகாசி மாதம், சுக்கில பட்சம், விசாக நட்சத்திரத்துடன் கூடியதால், வைகாசி விசாகம் எனக் கொண்டாடப்படுகிறது. அன்று விரதமிருந்து, வீடுகள்தோறும் திருக்குமரனைப் பூஜித்தால், பல பிறவிகளில் நாம் செய்துள்ள பாவங்கள் மறைந்தோடும். நம் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். அவ்வைப் பிராட்டிக்கு தரிசனமளித்து, மகிழ்ந்த வேலவனின் அழகைக் கற்களில் வடித்துத் தந்துள்ளனர், தமிழகத்தின் தெய்வீகச் சிற்பிகள். சிக்கல், பொரவச்சேரி, எண்கண், பழனி, திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்களில் முருகப் பெருமானின் திருவடிவழகை இன்றும் நம்மால் கண்டு தரிசிக்க முடிகிறது.

தேவராய ஸ்வாமிகள் இயற்றிய கந்தர் சஷ்டி கவசம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ் உலகப் பிரசித்திப் பெற்றது. தமிழகத்தின் ஏராளமான திருத்தலங்களிலும் அறுபடை வீடுகள் மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு ஆகிய வெளிநாடுகளிலும், முருகப்பெருமானுக்குத் திருக்கோயில் அமைந்து, நமக்கு இன்னருள்பாலிக்கின்றான், அந்த இன்னமுதன்! இந்த வைகாசி மாதத்திற்கு இதைவிட வேறென்ன பெருமை இருக்க முடியும்?

வைகாசி 7, 21-5-2023: ஞாயிற்றுக்கிழமையன்று தேய்பிறை மறைந்து, வளர்பிறை தோன்றும் இந்நாளில் சந்திர தரிசனம் செய்தால், அம்மாதம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இதை அனுபவத்தில் காணலாம். தொடர்ந்து இதே போல் சந்திர தரிசனம் செய்துவந்தால், அவர்களுக்கு அகாலத்தில் மரணம் ஏற்படாது. சதாபிஷேகம் கொண்டாடி, 120 வயது திடகாத்திரத்துடனும், மன மகிழ்வுடனும் வாழ்வர் எனக் கூறுகின்றன, புராதன நூல்கள்.

வைகாசி 8, 22-5-2023: திங்கட்கிழமையன்று கதலி கௌரி விரதம். இவ்விரதத்தை அனுஷ்டிக்கும், மணமேடைக்காகக் காத்திருக்கும் கன்னியருக்கு சாமுத்ரிக்கா லட்சணங்களுடன்கூடிய உடலமைப்பையும், முக வசீகரத்தையும் பெற்று, நல்ல மணமகன் அமைந்து, சகலவித ஸ்ரேஷ்டங்களையும் அளித்தருளும் உன்னதமான, சக்திவாய்ந்த விரதம் இது.

வைகாசி 13, 27-5-2023: சனிக்கிழமையன்று தூமாதி ஜெயந்தி. விஷ்ணு புராணத்தில் பகவான் தசாவதாரம் எடுத்தது விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது.

அதிலும் மிக முக்கியமான, முதல் அவதாரமாகிய மத்ஸ்ய அவதாரத்தின் சக்தியும், வீர்யமும், பராக்கிரமும் உடைய பராசக்தியானவள் தச வடிவங்களாகப் பூஜிக்கப்படுவதாக “சியாமள ரகசியம்” எனும் பிரசித்திப்பெற்ற நூல் விவரிக்கின்றது. நவக்கிரகங்கள் மற்றும் ஜனன லக்கினத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்களை அடியோடு போக்கி, இன்னருள் புரிபவளாகப் போற்றிப் புகழப்படுகின்றாள், தேவி பராசக்தி! இப்புண்ணிய தினத்தில், சுக்தம், தேவிபாகவதம் படிப்பதும், சொல்லிக் கேட்பதும், சொல்வதும், மனத்தால் நினைப்பதும் மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரக்கூடியது அன்றைய தினம் திருக்கோயிலுக்குச் சென்று, மூன்று அகல் விளக்குகளில் நெய்தீபம் ஏற்றிவைத்து அம்பாளை தரிசித்துவிட்டு, சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, குங்குமம் தாம்பூலம் கொடுத்து உபசரித்தால், நம் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று, மகிழ்ச்சியுடனும், மனநிறைவான வாழ்வையும் பெறுவது திண்ணம்.

திங்கட்கிழமை வைகாசி 15, 29-5-2023: சூரியனின் வீரியம் காரணமாக, கொடிய வெயிலின் உஷ்ணத்தின் ஆதிக்க தோஷம் நீங்கும் நாள்.

வைகாசி 18, 1-6-2023: வியாழக்கிழமையன்றுலட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம். இவ்வாண்டு வைகாசி 19, 2-6- 2023 வெள்ளிக்கிழமையன்று வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அன்று நம்மாழ்வார் திருநட்சத்திரமும் கூட.

வைகாசி 20, 3-6-2023: சனிக்கிழமை காஞ்சி மகா பெரியவாள் அவதார தினம். மேலும், வட சாவித்ரி விரதம். கணவர் – மனைவியரிடையே பரஸ்பர ஒற்றுமையையும், அந்நியோன்யத்தை அதிகரிக்கச் செய்து, தீர்க்க சுமங்கலிகளாக வையத்துள் வாழ்வாங்கு வாழ வைக்கும் விரதம். பௌர்ணமி விரதம். காலை முதல் விரதம் இருந்து., மாலையில் மாத்ருகாரகரான சந்திரனை தரிசித்துவிட்டு சத்திய நாராயணனைப் பூஜிப்பதால், சகலவித நன்மைகளையும் அவரவரது அனைத்துவித அபிலாஷைகளையும் பூர்த்தி செய்விப்பதாக சத்தியப் பிரமாணமே செய்துள்ளார் சத்தியநாராயணர்!

வைகாசி 22, 5-6-2023: திங்கட்கிழமை திருஞானசம்பந்தரின் அவதாரத் திருநட்சத்திர தினம்.

வைகாசி 27, 10-6-2023: சனிக்கிழமை முதல், வைகாசி 28, 11-6-2023 ஞாயிற்றுக்கிழமை வரை சிவபெருமானுக்கும், கால பைரவருக்கும் உகந்த தேய்பிறை அஷ்டமி: திருக்கோயிலுக்குச் சென்று, அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களாகிய பால், பழம், தயிர், தேன், இளநீரைக் கொடுத்தாலும், லிங்கத் திருமேனிக்கு வில்வ இலைகளால் அர்ச்சித்தாலும் பெறற்கரிய மகத்தான புண்ணிய பலன்களை அடையலாம்.

வைகாசி 31, 14-6-2023: புதன் கிழமை கூர்ம ஜெயந்தி. மரணமில்லாப் பெருவாழ்வுதனை அளித்தருளும் அமுதத்தினைப் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும், மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, பாற்கடலைக் கடைந்தபோது, கூர்மமாக ஆமை வடிவமாக பகவான் ஸ்ரீமந் நாராயணன் அவதாரம் எடுத்து, மிகப்பெரிய அம்மலையை, தன்னுடைய முதுகில் தாங்கிய புண்ணிய தினம்.

The post வைகாசி மாதத்தின் தெய்வீக சக்திகளும் ராசி பலன்களும்! appeared first on Dinakaran.

Tags : Rajagobalan ,
× RELATED ஹோட்டல் லீ மெரிடியன் விவகாரம்...